தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு! - Match Box allocated for MDMK - MATCH BOX ALLOCATED FOR MDMK

MDMK Symbol alloted by Election Commission: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 4:48 PM IST

சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மார்ச் 14 அன்று சந்தித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விண்ணப்பம் அளித்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் பதில்: நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது எனவும், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பொது சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும் என தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் வாயிலாக மதிமுக வழக்கறிஞர்களுக்கு பதில் அளித்துள்ளது.

இதனிடையே, மதிமுக தனிச் சின்னத்தில் மட்டுமே தேர்தலில் களம் காணும் என உறுதிப்படத் தெரிவித்துள்ள மதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, பம்பரம் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு: மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி, கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாகச் சுட்டிக் காட்டி பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மார்ச் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மதிமுக மனுவிற்கு இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில், மதிமுக வேட்பாளராக துரை வைகோ களம் காண்கிறார்.

இதையும் படிங்க:"அதிமுக வாக்குகளை குறி வைக்கிறேனா?" - ஈடிவி பாரத்திற்கு மனம் திறந்த நயினார் நாகேந்திரன்! - NAINAR NAGENDRAN

ABOUT THE AUTHOR

...view details