கும்பகோணத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம் தஞ்சாவூர்: மாசி மகப் பெருவிழா என்பது, கும்பகோணம் மாநகரில் ஒவ்வொரு ஆண்டும், 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ ஆலயங்கள் என 17 கோயில்கள் பங்குபெற இணைந்து நடைபெறும் பெருவிழாவாகும். அந்த வகையில், இந்த ஆண்டும் 5 சிவாலயங்களில் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றமும், 3 வைணவ ஆலயங்களில் கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடனும் இவ்விழா துவங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்வாக, மாசி மாதம் பௌர்ணமியுடன் கூடி மக நட்சத்திர தினமான நாளை (பிப்.24) மாசி மக தீர்த்தவாரி, கொடியேற்றம் நடைபெற்ற 5 சிவாலயங்கள் மற்றும் ஏக தின உற்சவமாக நடைபெறும் 5 சிவாலயங்கள் என 10 கோயில்களில் இருந்து, உற்சவர் சுவாமிகள் மகாமக குளத்தின் 4 கரைகளிலும், நண்பகல் 12 மணி அளவில் எழுந்தருளி, 10 அஸ்திரதேவர்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, பிறகு ஒரே சமயத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
முன்னேற்பாடுகள்:இந்த தீர்த்தவாரி உற்சவத்திற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, பல வெளி மாநிலங்களிலிருந்தும் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் வருவர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, குளத்தில் மூன்றரை அடி உயர அளவிற்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணியில் இருந்து மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பாதுகாப்பு வசதிக்காக மகாமக குளம் வளாகத்தில் 35 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 4 கரைகளிலும் வயதானோர், குழந்தைகள் குளிக்க ஏதுவாக ஷவர் அமைக்கப்பட்டு வருகிறது.
குளத்தின் 4 கரை சந்திப்புகளிலும் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படவுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பெண்கள் உடைமாற்றம் செய்ய குளத்தின் தென்மேற்குப் பகுதி மற்றும் வடமேற்குப் பகுதி என இரு இடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. குளத்தில் இறங்கி புனித நீராடுவோர் பாதுகாப்பிற்காக, தீயணைப்புத் துறையினர் நாள் முழுவதும் பைபர் படகில் கண்காணிப்புப் பணியில் இருப்பர்.
பக்தர்களுக்காக தற்காலிக மருத்துவ சேவை மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. காலை முதல் நண்பகல் வரை திதி தர்ப்பணங்கள் செய்வோர் வசதிக்காக, குளத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் முன்னிலையில், வருவாய்த்துறை, காவல்துறை, அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம், மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு.. வெறிச்சோடி காணப்பட்ட ராமேஸ்வரம் துறைமுகம்!