மதுரை: மதுரை மாபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லை.
நாற்காலிக்கான பட்ஜெட்டாக, ஆந்திரா, பீகாருக்கு மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. பீகாரில் உள்ள கோசி நதியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 21,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு நிதி ஒதுக்கவில்லை. அந்நிய மூலதனத்திற்கான வரிக் குறைப்பு தேசத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். மாநிலங்களை பழிவாங்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்தியது. இந்த நிமிடம் வரை ரயில்வே திட்டங்களுக்கான பிங்க் புக் வெளியிடப்படவில்லை. ஆவணத்தை தராமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரயில்வே வரலாற்றில் இல்லாத அளவிற்கு விபத்துக்கள் நடந்துள்ளன.