சென்னை:மைக்ரோசாப்ட் விண்டோஸில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னையை பொறுத்தவரையில், இன்றும் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதியத்திலிருந்து, நள்ளிரவு வரையில் சென்னை விமான நிலையத்தில் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் 60க்கும் உள்ள மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இன்னும் மைக்ரோ சாப்ட்வேர் விண்டோஸ் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இதனால் இரண்டாவது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு வருகை விமானங்கள் எட்டு, புறப்பாடு விமானங்கள் எட்டு மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையத்தில் லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை மற்றும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம், கொச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.
சர்வதேச பிரச்சனை: இதனால் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது," நேற்றைவிட ஆனால் இணையதள சேவை ஒரே சீராகக் கிடைக்காமல், விட்டு விட்டு வருவதால், இன்றும் பாதிப்பு ஏற்படுகிறது.
இணையதள சேவையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்று மதியத்திற்குள் முழுமையாக சீரடைந்துவிடும் என்று நம்புகிறோம். இந்தப் பிரச்சனை சென்னை விமான நிலையத்தில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் ஏற்பட்ட பிரச்சனை" எனத் தெரிவித்தனர்.