சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அதிமுக தனது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வரக்கூடிய நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியுடன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி, தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என கேட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அதிமுக தவிர்த்து, வேறு ஒரு பெரிய கட்சியும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாகக் கேட்டு வருவதாகவும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:2023ஆம் ஆண்டின் டாப் 1 இடத்தை பிடித்த லியோ!