எனக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து எதிர்கட்சியினருக்கு ஆத்திரம் வருகிறது திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியிற்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மளிகை தோப்பு, துத்திப்பட்டு இணைக்கக் கூடிய பாலாற்றில் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும், தொழிலாளர்களிடையே ஆதரவு திரட்டினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் கூறியதாவது, “சின்னம் கிடைத்தவுடன் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றேன், எனக்கு மக்களின் அமோக ஆதரவைப் பார்த்து அதற்குள் எதிர்க்கட்சியினர் ஆத்திரம் அடைகின்றனர்.
மக்கள் என்னிடம் வாருங்கள், ஒரு மாற்றம் வேண்டும், என்று கேட்கிறார்கள். நான் மனப்பூர்வமாக வந்துள்ளேன், எனக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. மேலும் தேர்தல் அலுவலகத்தைத் தேர்தல் அதிகாரிகள் அகற்றியது குறித்த கேள்விக்கு, தேர்தல் ஆணையம் என் வேட்டியையும், சட்டையும் கூட அவிழ்த்துக்கொள்ளலாம்.
மணல், போதைப் பொருட்கள் மற்றும் மலையை விற்று ஆயிரம் பேனர்கள் வைத்துள்ளார்கள். ஒரு இடத்தில் உள்ள என்னுடைய பேனர் அவர்களுக்குப் பொறுக்கவில்லை, அனுமதி வாங்கவில்லையெனக் கூறுகிறார்கள், ஆனால் அனுமதி எல்லாம் முறைப்படி தான் வாங்கினேன்.
சாதாரண வண்டிகளைக் கூட சோதனை செய்கிறார்கள், வியாபாரிகள் கஷ்டப்படுகிறார்கள். ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம்கள் ஜகாத் கொடுக்கமுடியவில்லை, எல்லா ஜகாத்தையும் ஜி.எஸ்.டி வரி மூலம் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இந்த மலைகளைக் காக்க வேண்டும், மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும், நீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டும், தில் இருந்தால் தனியாக நின்று வெற்றி கொள்ளட்டும். இது நாடக தேர்தல், மோடி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிவிட்டார். அவர் ஏற்கனவே குத்தி வைத்துவிட்டார்.
மிச்சம் இருப்பதைப் பிச்சை போடுவது போல் நீங்களும் வெற்றி கொள்ளுங்கள் என்று கூறுவார். வடமாநிலங்களில் மோடி கா கேரண்டி என்று 10 ஆயிரத்திற்கும் மேலாக பஸ் போகிறது. அவர் யாருக்கு கேரண்டி கொடுக்க ஏமாற்று வேலை செய்கிறாய், யாரும் கேட்பதில்லை, நான் ஒருவன் தான் கேட்கிறேன் என தெரிவித்தார். இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேன், சின்னம் கிடைத்தவுடன் வாள் சுழற்றுவேன், அனைத்து கட்சியின் வண்டவாளத்தையும், தண்டவாளத்தில் ஏற்றுவேன்.
எங்கு சென்றாலும் மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருகின்றனர். நான் நாடாளுமன்றம் சென்றால் உண்டு இல்லை என்று செய்வேன், என் மக்களுக்கு எல்லாம் செய்வேன் என தெரிவித்தார். இந்நிலையில் மன்சூர் அலிகானை காண அதிக அளவு பொதுமக்களும், காலணி தொழிலாளர்களும் கூடியதால் பாலாறு பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே பயங்கர தீ விபத்து.. தீயில் கருகிய ரூ.50 லட்சம் மரங்கள்! - Wooden Godown Fire Incident