தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அண்ணாமலைக்கு சட்டமன்றம், நாடாளுமன்றம் என்றால் என்ன என்று தெரியாது" - அமைச்சர் மனோ தங்கராஜ் - minister Mano Thangaraj

Minister Mano Thangaraj: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் என்றால் என்ன என்று தெரியாது. இந்நிலையில், திமுக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சனம் செய்கிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓர் பொய் புழுகியா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 12:47 PM IST

அமைச்சர் மனோ தங்கராஜ்

தூத்துக்குடி: தூத்துக்குடி, நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும் போது, சட்டமன்றத் தேர்தல் அறிக்கை மாதிரி திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை உள்ளது என்று திமுகவை விமர்சனம் செய்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "அண்ணாமலைக்குச் சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன, நாடாளுமன்றத் தேர்தல் என்றால் என்ன என்று தெரியாது.

அவர், சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் சென்றவர் அல்ல. அந்த நடவடிக்கையைக் கவனித்தவரும் அல்ல. திமுகவின் தேர்தல் அறிக்கையில், மிக முக்கியமான தேர்தல் அறிக்கை என்று சொல்லும் இந்நேரத்தில், 10 ஆண்டுக் காலம் கேஸ் மற்றும் பெட்ரோல் விலையை உயர்த்தி இந்திய நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் இந்த மோடி அரசு வஞ்சித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலையை நேர் பாதியாகக் குறைப்போம் என்று சொல்லி இருக்கிறோம். ஏழை எளிய தாய்மார்கள் பயன்பெறும் வகையில், கேஸ் விலையை ரூ.500 கொண்டு வர தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வழிப்பறி செய்யப்படுகின்ற சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படும். உரிமைத் தொகை மகளிருக்கு வழங்கப்படுகிறது.

இதுபோன்ற அற்புதமான திட்டங்கள் அனைத்தும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியா, அல்லது மாநிலத்திற்கான வாக்குறுதியா என்பது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா? இல்லை எப்போதும் பேச வேண்டும் என்பதற்காகப் பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி பாவம், அவர் உயிர் வாழ்வதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பிரதமர் வேட்பாளர் யார் என்று பல்வேறு குழப்பங்கள் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு பத்தாண்டுக் காலத்தில் எவ்வளவு தவறுகளை இழைத்தார்கள். எவ்வாறு தோற்றுப் போன அரசாக இருந்தது என்பது நமக்குத் தெரியும். இன்று, திமுக அரசு மக்கள் மத்தியில் பலமாக ஊடுருவி மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். 75 சதவிகிதத்திற்கு மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். எஞ்சிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திமுக பொறுத்தவரையில் தேர்தல் வாக்குறுதிகளில் எந்த குறைகளும் இல்லை. தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வு குறித்த திட்டங்களை திமுகவிற்கு யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார்.

தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டில் சில கட்சிகள் வேட்பாளர்களுக்குத் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், திமுக வேட்பாளர்களை அறிவித்து, வெற்றி கூட்டணி அமைத்து, முதலமைச்சர் பிரச்சாரத்தைத் துவங்க உள்ளார். இது மகத்தான கூட்டணியாக 40 என்ற மந்திரத்தை, நிதர்சனத்தில் உருவாக்கும் தேர்தலாகத் தான் இந்த தேர்தல் 100 சதவீதம் இருக்கும்” என்றார்.

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்ட நிலையில், “திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான், 2021 - தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதியைக் கொடுத்துள்ளது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தருமபுரி அதிமுக வேட்பாளரை அறிவித்த ஈபிஎஸ்.. யார் இந்த டாக்டர் அசோகன்?

ABOUT THE AUTHOR

...view details