திருநெல்வேலி:மாஞ்சோலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்த காலம் விரைவில் முடிவடையுள்ள நிலையில், அங்குள்ள தொழிலாளர்களை விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட இடங்களில் வழக்கு தொடர்ந்தனர். இந்தச் சூழலில் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த புகாரினை ஏற்று கள ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த விசாரணையை மேற்கொள்ள, தேசிய மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரவி சிங் மற்றும் ஆய்வாளர் யோகேந்தர் குமார் திரிபாதி உள்ளிட்டோர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து நான்கு நாட்கள் நெல்லை மாவட்டத்தில் தங்கி இருந்து விசாரணையை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ள நிலையில், முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தொழிலாளர் நலத்துறை, வனத்துறை ஆகியோரிடம் மாஞ்சோலை தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனு குறித்தும், மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்