சென்னை: ஓமந்தூரார் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. ஏ, பி, சி, டி கொண்ட நான்கு பிளாக்குகளில் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குடியிருப்புகள் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளை பராமரிப்பதற்காக 16 பெண் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்ற தூய்மைப் பணியாளர், சி-பிளாக் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திமுகவின் கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதின் உதவியாளர் அபு என்பவர், தனது காரை வேகமாக ஓட்டி வந்த நிலையில், அங்கு அமர்ந்திருந்த ஆரோக்கிய மேரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் சிக்கிய ஆரோக்கிய மேரிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, விபத்து தொடர்பாக அப்பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் அந்த புகாரை வாங்க மறுத்ததுடன், அவர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தூய்மைப் பணியாளர் ஆரோக்கிய மேரி மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கார் மோதி விபத்து ஏற்படுத்திய மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமதின் உதவியாளர் அபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:“பெண் காவலர்கள் தாக்கினார்களா?”.. நீதிமன்றத்தில் முறையிட்ட சவுக்கு சங்கர்! - Savukku Shankar Assaulted