திருநெல்வேலி:வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. அதனால், திருநெல்வேலியில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளும், அருவிகளும் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.
அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என்று குறிப்பிடப்படும் தாமிரபரணியை நமக்கு தந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை, பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கண்ணுக்கு விருந்தளிக்கும் மணிமுத்தாறு:
மணிமுத்தாறு அருவியை சுற்றியுள்ள இயற்கை காட்சி (ETV Bharat Tamil Nadu) இந்த மலைக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக பல நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளது. அதிலும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு, மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் தவழ்ந்து ஓடும் மணிமுத்தாறு அருவி, அப்பகுதியைக் கடந்து செல்லும் நபர்களின் கண்ணிற்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க:சீரகமா?..வண்டா? வந்தே பாரத் ரயில் உணவில் கிடந்தது என்ன? - பயணிகள் கேள்வி!
அந்த ரம்மியமான காட்சியை பார்த்துக் கொண்டே மலைச்சாலை வழியாக சுமார் 5 கி.மீ பயணம் செய்தால், மணிமுத்தாறு அருவியை அடைந்து விடலாம். அதேபோல, அங்கிருந்து சுமார் 30 கி.மீ அமைந்துள்ளது மாஞ்சோலை, ஊத்து, நாலுமுத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை எஸ்டேட் பகுதிகள். இப்பகுதிகள் அனைத்து வனப்பகுதியாக மாற்றப்பட்டுள்ளதால், இந்த எஸ்டேட்கள் செயல்படவில்லை குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க வனப்பகுதியான மாஞ்சோலை, தமிழ்நாட்டின் அதிக மழை பொழிவு ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
மூன்றாயிரம் அடியிலிருந்து வரும் தண்ணீர்:
மணிமுத்தாறு அருவி (ETV Bharat Tamil Nadu) குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு தருவதில் முதலிடத்தில் மாஞ்சோலை அமைந்துள்ளது. இயற்கை அரண் சூழ்ந்த ஊத்து, நாலுமுக்கு போன்ற பகுதியில் ஆண்டிற்கு ஆறு மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும். குறிப்பாக, கோடைக் காலத்தில் கூட மாஞ்சோலை மலைக்கு சென்றால் மழை பொழிவை நம்மால் காண முடியும்.
அந்த அளவுக்கு இயற்கையின் மகத்துவத்தைக் கொண்ட ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி போன்ற பகுதியில் பெய்யும் மழை நீரானது, சுமார் 3,000 அடி உயரத்திலிருந்து மணிமுத்தாறு அருவியை வந்தடைகிறது. அதன் காரணமாக, மழை நேரங்களில் மணிமுத்தாறு அருவியில் வெள்ளியை உருக்கிவிட்டது போன்று வெள்ளை நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்; நெல்லை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்குவில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது.
ஓய்வின்றி ஓடிய அருவி:
மணிமுத்தாறு அருவியின் அணைக்கட்டுப் பகுதி (ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியின் தற்போதைய நிலை குறித்து அறிய நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் சார்பாக, திருநெல்வேலி செய்தியாளர் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், போகும் வழியெங்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக, மணிமுத்தாறு அணையை பனி சூழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அணையைக் கடந்து செல்லும் போது, சாலையில் இருபுறமும் பச்சைப் போர்வையைப் போர்த்தியது போன்று மரம், செடிகொடிகள் காட்சியளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் கூறுகையில், "வான் மழை பன்னீர் தூவ மேகங்கள் பனிமூட்டங்கள் மேகங்களாக மாற மலைப்பகுதி மிகவும் ரம்மியமாக காட்சி அளித்தது. பனிமூட்டம் புகை போல் காற்றில் நகர்வதைக் காண முடிந்தது. கடும் குளிரைக் கடந்து மணிமுத்தாறு அருவியை அடைந்தபோது, அங்கே முற்றிலும் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடியது. ஆனால், அருவி மட்டும் எந்த ஓய்வும் இல்லாமல் கலகலவென வெள்ளியை உருக்கிவிட்டது போன்று தண்ணீரை கொட்டியது. கனமழை காரணமாக அருவியில் சுற்றிப் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், அருவியை சுற்றி யாரும் இல்லை. ரம்மியமான மலைகளுக்கு நடுவே தண்ணீர் ஓசையோடு அருவி காட்சியளித்தது," எனத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்