வேலூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா ஆகியவை நடைபெறுவது வழக்கமாகும். பொங்கலை முன்னிட்டு துவங்கியுள்ள எருது விடும் திருவிழா பல்வேறு கிராமங்களில் வரும் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தின் 18 கிராமங்களில் எருது விடும் மற்றூம் மஞ்சுவிரட்டு விழா போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்தும், எருது விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை சோழவரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திர மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து, போட்டியில் பங்கேற்ற காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்துள்ளன. இந்த விழாவில் 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.