தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தப்ப முயன்ற தலைமறைவு குற்றவாளி.. சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி? - Man arrested in Chennai airport - MAN ARRESTED IN CHENNAI AIRPORT

Chennai Airport: சென்னை மாநகர போலீசாரால் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் அபுதாபி தப்பிச்செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையம் புகைப்படம்
சென்னை விமான நிலையம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 5:01 PM IST

சென்னை:குற்ற வழக்குகளில் திருமங்கலம் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர், சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் பொழுது சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்தவர் வசந்த் டேவிட் (35). இவர் மீது சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அரசு ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல், அத்துமீறி உட்பிரவேசித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடந்த மார்ச் மாதம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருமங்கலம் போலீசார், வசந்த் டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்த தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். மேலும், இவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாகவும் போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் திருமங்கலம் போலீசார் வசந்த் டேவிட்டை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் இவர் மீது எல்ஓசி போடப்பட்டது. இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ் (Etihad Airways) பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டுள்ளது.

அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்தில் ஏற அனுப்பிக் கொண்டிருந்துள்ளனர். அந்த நேரத்தில், அந்த விமானத்தில் அபுதாபி செல்வதற்காக போலீசாரால் தேடப்படும் வசந்த் டேவிட் வந்துள்ளார். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர்.

அதில், இவர் திருமங்கலம் போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை கம்ப்யூட்டர் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, வசந்த் டேவிட்டின் விமான பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு, அவரை வெளியில் விடாமல் குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்து, திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் சென்னை விமான நிலையம் வந்து, வசந்த் டேவிட்டை கைது செய்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:திருப்பூர்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; காவல்துறை விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details