தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சென்ட்ரலில் பயணியின் கைப்பையை நைசாக லவட்டி சென்ற நபர்... போலீசில் சிக்கியது எப்படி? - Chennai Central theft issue - CHENNAI CENTRAL THEFT ISSUE

Chennai Central Railway Station Theft Issue: சென்னை சென்ட்ரலில் தங்க நகை, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த பயணியின் கைப்பையை நைசாக எடுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பயணியின் கைப்பை திருடப்படும் சிசிடிவி காட்சி
பயணியின் கைப்பை திருடப்படும் சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 11:14 AM IST

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய பயணிகள் வந்துபோகும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பயணிகள் ரயில்களின் வருகைக்காகக் காத்திருக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணியின் கைப்பை திருடப்படும் சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரயில் வருகைக்காக, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லியோனி ஸ்மித் என்ற பெண் பயணி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், பயணிகள் காத்திருந்த இருக்கைகளை நோட்டமிட்டுள்ளார். லியோனி ஸ்மித் இல்லாத நேரத்தில், அவரின் கைப்பையை எடுத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த ஸ்மித், தமது கைப்பையை காணவில்லை என அருகே இருந்த சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாத ஒரு நபர் நோட்டமிட்டு, ஆள் இல்லாத நேரத்தில் நைசாக பையை எடுத்துச் செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்ததை கண்டறிந்தனர். அந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றித் திரிந்துள்ளார். அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் தான் லியோனி ஸ்மித்தின் கைப்பையை திருடியது என்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த நபரை சோதனை செய்ததில், அவர் திருடி சென்ற பையில் இருந்த சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான சைபர் கிரைம் வழக்கு.. சொந்த ஜாமீனில் விடுவிக்க மகிளா நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details