தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே நரியங்காடு கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாதி எரிந்த நிலையில் 30 வயது உடைய வாலிபர் உடல் கிடந்தது. இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வாலிபர் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு சாக்கு முட்டையில் ரத்தக்கரை படிந்த பெட்ஷீட், சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற கைலி உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன.
இதை தடய அறிவியல் நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் பிணமாக கிடந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பது தெரிய வந்தது.
மேலும், ஆறுமுகம் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக துப்பு கிடைக்காததால் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டு புகழேந்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.