தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. 178 வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை பங்கிட்டது அம்பலம்..! - DIGITAL ARREST SCAM

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலமாக சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய பொதுப்பணித் துறை அதிகாரியிடம் பண மோசடி செய்த அசாமைச் சேர்ந்த நபரை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம் (Credits - Etv Bharat (File))

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 10:41 PM IST

சென்னை: பொதுமக்களை செல்ஃபோன் வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு, 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடியை அரங்கேற்றி வருகிறனர்.

அதில் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் சமீபத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலமாக பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த பண மோசடியில் ஈடுபட்ட அசாமைச் சேர்ந்த நபரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், "சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக அதிகாரி ஒருவருக்கு செப்டம்பர் 3ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்ஆப் கால் செய்துள்ளார்.

அதில், பேசிய நபர் மகாராஷ்டிரா காவல்துறை எனக் கூறி அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது என்றும் கூறி அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

மேலும், உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மூலம் நடைபெற்றுள்ள பண மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் ஆஜராகுமாறு கூறியுள்ளார். இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) மூத்த தொலைத் தொடர்பு அதிகாரி போன்ற ஒரு நபருக்கு அந்த அழைப்பு அனுப்பப்பட்டு புகார்தாரருடைய குடும்பம் மற்றும் வங்கி விவரங்களை கேட்டறிந்து விசாரணை முடியும் வரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:ரஷ்ய அரசு பெயரில் தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி; தாசில்தார் உள்ளிட்ட 9 பேர் கைது!

அதனைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் நிரந்தர வைப்புத் தொகை மற்றும் இதர வங்கிக் கணக்கில் உள்ள பணத்தினை அவர்கள் தெரிவிக்கும் ரிசர்வ் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றும், சரிபார்ப்புக்குப் பின்னர் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவதாகவும் அந்த மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அதை உண்மை என்று நம்பி கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி மர்ம நபர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு இரு தவணைகளாக ரூ.88 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில், புகார்தாரர் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கப்பட்டதும், அந்த வங்கிக் கணக்கிற்கு கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி மட்டும் 3 கோடியே 82 லட்சத்து 27 ஆயிரத்து 749 ரூபாய் இணையதள குற்றங்கள் மூலமாக வரவு வைக்கப்பட்டு அன்றே இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 178 வங்கிக் கணக்குகளுக்கு ஒரே நாளில் பணம் அனுப்பப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க:கரூரில் தீரன் பட பாணியில் கொள்ளையடிக்க முயன்ற ஆறு பேர் கைது...சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குள் சுற்றி வளைத்த போலீஸ்!

அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் தனிப்படை போலீசார் அசாம் மாநிலம் சென்று விசாரணை மேற்கொண்டு அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான பார்த்தா பிரதிம் போரா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக சென்னை காவல் ஆணையர் கூறுகையில், "எந்தவொரு மாநில காவல் துறையோ, CBI மற்றும் TRAI போன்ற அரசு துறையைச் சார்ந்த அதிகாரிகளோ இது போன்று ஸ்கைப், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் மூலம் அழைத்து டிஜிட்டல் கைது செய்து விசாரணை செய்வதில்லை. ஆகவே, பொதுமக்கள் அதை உண்மை என்று நம்பி அடையாளம் தெரியாத வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்" என எச்சரித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details