தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே கரிசல் குளம் காட்டுப் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அடையாளம் காண முடியாத படி எரிக்கப்பட்டு அழுகிய நிலையில் ஒரு மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் அருகே தீயிட்டு எரிக்கப்பட்ட பெண்ணின் உடைகள் துண்டு துண்டாக கிடந்தது.
இது தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இறந்து கிடந்தது சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி காந்திமதி (71) என்பது தெரிய வந்தது. முன்னதாக மூதாட்டி காந்திமதியைக் காணவில்லை என அவரது மகன் போலீசில் புகார் அளித்திருந்துள்ளார்.
அதன்படி, அவரிடம் கயத்தாறு காட்டுப் பகுதியில் எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு துணிகளை காட்டிய பொழுது அது அவரது தாயார் காந்திமதியின் உடைகள் தான் என அடையாளம் காட்டினார். கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழிகாட்டுதலின்படி, கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், காணாமல் போன காந்திமதி, சம்பவத்தன்று சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டி மகன் சண்முகபாண்டி (35) என்பவருடன் காரில் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் சண்முகபாண்டியைப் பிடித்து தீவிரமாக விசாரணை செய்ததில், அவர் காந்திமதியைக் கொன்று கயத்தாறு காட்டுப் பகுதியில் எரித்தது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட காந்திமதி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.