சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மகாத்மா காந்தியை போல் யார் வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் அவர் போன்ற வீரமும், தைரியமும் உள்ளதா என்ற கேள்வியை என்னை நானே பார்த்து கேட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லாம் ஏன் அரசியல் வருகின்றீர்கள்? வேண்டாம், அது சரி வராது என என்னிடம் பலர் சொன்னார்கள். மக்களை சந்திக்க எந்த மேடையாக இருந்தால் என்ன என்று அரசியலுக்கு வந்தேன். தற்போது நான் தோல்வியை தழுவினாலும் இது நிரந்தரமல்ல 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது மிக ஆபத்தானது. 2014-இல் இப்படி செய்திருந்தால் இன்று இந்தியாவின் நிலை என்னவாயிருக்கும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதிதாக அரசியல் களத்திற்கு வருபவர்கள் என அனைவருக்கும் இந்தியா சொந்தமானது. இந்தியாவில் நேர்மையான மாநிலம் தமிழ்நாடு தான். இந்த நாட்டை நடத்தி கொண்டிருப்பது நம் வரி பணம் தான். மத்திய அரசு வட இந்தியாவுக்கு கர்ணனாகவும் தமிழ்நாட்டிற்கு கும்ப கர்ணனாகவும் இருக்கிறது" எனக் கடுமையாக விமர்சித்தார்.