சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கல்வி கூட்டியக்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முரளி, அரசு, சிவக்குமார் மற்றும் ஆசிரியை சு.உமா மகேஸ்வரி இன்று (பிப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "2009ஆம் ஆண்டிற்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி, கடந்த மூன்று நாள்களாகப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நாள்தோறும் 800 முதல் 900 ஆசிரியர்கள், சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் (டிபிஐ) அலுவலக வளாகத்தில் கைது செய்யப்பட்டு, பின் மாலையில் விடுதலை செய்யப்படுகின்றனர். எனவே, நேற்று முதல் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 10 ஆயிரம் எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து பள்ளியைப் புறக்கணித்து வருகின்றனர். கடந்த நாட்களில் அரசு தரப்பில் இருந்து இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் ஒற்றைக் கோரிக்கையினை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய பொழுது, 'தீர்வு காண்கிறோம்' என உறுதி அளித்துப் போராட்டத்தைத் திரும்பப் பெற வைத்தது தமிழக அரசு. ஆனால், மூன்று மாதங்கள் ஆன பிறகும், அது குறித்து எந்த நகர்வும் இல்லாததால், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்பது அடிப்படை உரிமை.
ஆகவே அரசும், கல்வித்துறையும் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, உரிய நீதியை வழங்க வேண்டும். மேலும், மாணவர்கள் கற்றல் இழப்பைக் கவனத்தில் கொண்டு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் அரசைக் கேட்டுக்கொள்கிறது. தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மக்கள் கல்வி கூட்டியக்கம் துணை நிற்கும்' என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நீங்க ரோடு ராஜாவா? ஒரே வாரத்தில் குவிந்த புகார்கள்.. சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடி!