சென்னை:15 வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு; சென்னை சோகம்
சென்னை, மடிப்பாக்கம், ராம் நகரில் தனியார் நான்கு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் யோகேஸ்வரன் - ராஜேஷ்வரி தம்பதி. யோகேஸ்வரன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஹரிணி என்ற மகள் இருந்தார். அவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று யோகேஸ்வரன் வீட்டில் துவைத்த துணிகளை வீட்டின் நான்காவது தளத்தில் உள்ள மாடியில் காய வைத்துள்ளனர். அப்போது மாலை நேரத்தில் மழை வருவது போல் இருந்ததால், மொட்டை மாடியில் காயவைத்த துணிகளை எடுப்பதற்காக சிறுமி ஹரினி சென்று உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக துணிகளை எடுத்துக்கொண்டிருந்த போது ஹரிணி நான்காவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உள்ளார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து அவரது தந்த யோகேஸ்வரன் ஹரினியை மீடு காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த ஹரிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் டெண்டர் முறைகேடு; சிபிஐ அதிகாரிகள் சோதனை
சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் டெண்டர் ஒதுக்கியதில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் துறைமுகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற புகழேந்தி என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள சன்சைன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனையை சிபிஐ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.