கடலூர்: கடலூர் காராமணி குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி(65), சுதன் குமார்(40) மற்றும் சுதன் குமாரின் மகன் நிஷாந்த்(10) ஆகிய மூன்று பேரும் கடந்த ஜூலை 14ஆம் தேதி கொலை செய்யப்பட்டு, வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, 7 தனிப்படைகளை அமைத்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும், 200க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவரின் செல்போன் சம்பவ இடத்தில் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் குடும்பத்தைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சங்கர் ஆனந்த் என்பவரை நேற்று சென்னையில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், அவரை நெல்லிக்குப்பம் கொண்டு வந்து விசாரித்த போது, அவருடன் ஷாகுல் அமீது என்பவரும் இணைந்து இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், "தாய், தந்தையை இழந்த தன்னை அனாதை என்ற வார்த்தையைக் கூறி கமலேஸ்வரி திட்டியதால் கடும் கோபம் அடைந்ததாகவும், அதனால் கடந்த 12ஆம் தேதி அவரது வீட்டிற்குச் சென்று 3 பேரையும் வெட்டிப் படுகொலை செய்ததாகவும், அப்போது கத்தி தவறுதலாக என்னுடைய இன்னொரு கையில் பட்டு என்னுடைய விரல் துண்டானது எனத் தெரிவித்த அவர், மீண்டும் கடந்த ஜூலை 14ஆம் தேதி காலையில் ஷாகுல் அமீதுடன் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று அங்கு இறந்த நிலையில் கிடந்த உடல்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தியதாகவும்" சங்கர் ஆனந்த் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.