தூத்துக்குடி:கடந்த 2020ஆம் ஆண்டு தூத்துக்குடியில் 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வேல்முருகன் (57) என்பவரை, எட்டையாபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய காவல் ஆய்வாளர் கலா என்பவர் புலன் விசாரணை செய்து, கடந்த 2020 ஆகஸ்ட் 4ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை மார்ச் 5ஆம் தேதி விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், வேல்முருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேபோல, கடந்த 2021ஆம் ஆண்டு இதே மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த மற்றொரு வழக்கில், கிருஷ்ணன்(68) என்பவரை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் மீராள் பானு புலன் விசாரணை செய்து, அதே ஆண்டு ஜூலை 16ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணையும் தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் நேற்று (மார்ச் 7) குற்றவாளியான கிருஷ்ணன் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராள் பானு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமைக்காவலர் சங்கீதா ஆகியோரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் நாளை பந்த்..! சிறுமி கொலை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் - இரா.சிவா