தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சைதாப்பேட்டை டூ திருப்பூர்: போலீஸ் கட்டத்தில் மகாவிஷ்ணு.. பரம்பொருள் அறக்கட்டளையில் நடப்பது என்ன? - mahavishnu government school issue - MAHAVISHNU GOVERNMENT SCHOOL ISSUE

அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை, சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினர் திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் போலீசார் மகாவிஷ்ணுவை அழைத்து வந்த புகைப்படம்
திருப்பூர் போலீசார் மகாவிஷ்ணுவை அழைத்து வந்த புகைப்படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 3:35 PM IST

திருப்பூர்:சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆன்மீகம் என்ற தலைப்பில் மாணவர்களிடையே மூடநம்பிக்கை விதைக்கும் சொற்பொழிவு நடத்திய வழக்கில் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இவரை சைதாப்பேட்டை காவல்துறையினர் திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு அளித்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றம் இவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து திருப்பூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பரம்பொருள் அரக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்து வந்தனர்.

மகாவிஷ்ணு (Credits - ETV Bharat)

அவரது அலுவலகத்தில் வைத்து பரம்பொருள் மையத்திற்கு வரும் நன்கொடைகள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பரம்பொருள் தலைமை அலுவலகம் ஆனது அவிநாசியில் சிறிய அளவில் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதன் கிளைகளை நிறுவ வருவாய் எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரை விசாரணைக்காகத் திருப்பூர் அழைத்து வரும்போது, அம்மாவட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மகாவிஷ்ணு மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் விபரம்

  1. 192 கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது,
  2. 196 (1) (a) சமூகத்தில் வெறுப்பான தகவல்களை பரப்புவது,
  3. 352 பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது,
  4. 353 (2) மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது,
  5. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a) பிரிவின் படி மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான குற்றம் செய்வது.

மேற்கூறப்பட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் இயங்கிவரும் அரசுப் பள்ளியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம்பொருள் அரக்கட்டளையின் சார்பில் பேச அழைக்கப்பட்ட அதன் நிறுவனர் மகாவிஷ்ணு, பள்ளி மாணவர்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைக்கும் விதமாகவும், அதை எதிர்த்து கேள்விகேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி காயப்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவரை கைதுசெய்து, காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறனர்.

ABOUT THE AUTHOR

...view details