தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை இளைஞர் இறப்பில் சந்தேகம் - ஆணவ படுகொலை என உறவினர்கள் போராட்டம்! - MADURAI YOUTH SUSPICIOUS DEATH

மதுரையில் இளைஞர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 10:12 PM IST

Updated : Jan 22, 2025, 2:40 PM IST

மதுரை: மதுரை அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் குளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கள்ளிக்குடி அருகேயுள்ள வேப்பங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த லிங்குசாமி முத்து என்பவரின் மகன் காளையன் (23), அதே பகுதியைச் சேர்ந்த வேற்று சமூகப் பெண்ணைக் காதலித்து வந்தததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஜனவரி 8 அன்று, காளையன் வீட்டில் புகுந்த சில நபர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

வீடு திரும்பாத காளையன்

இது தொடர்பாக வெளியான கண்காணிப்புக் கேமரா பதிவில், காளையன் வீட்டின் முற்றத்தில் அத்துமீறி நுழையும் சிலர் (பெண் வீட்டு தரப்பு எனக் கூறப்படுபவர்கள்) தகாத வார்த்தைகளைக் கூறி அவரை திட்டுவதும், சரமாரியாகத் தாக்குவதும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, மறுநாள் கள்ளிக்குடி காவல் நிலையம் சென்று இருதரப்பும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

குளத்தில் சடலமாக மிதந்த காளையன் உடல் (ETV Bharat Tamil Nadu)

சுமூகமாக பிரச்னை முடிந்தது என நினைத்திருந்த காளையன் குடும்பத்திற்கு ஜனவரி 13-ஆம் தேதி நடந்த சம்பவம் பேரிடியாக இருந்தது. அன்றைய தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற காளையன் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பதறிய உறவினர்களும், நண்பர்களும் அவரை தேடிய நிலையில், ஊர் அருகே உள்ள குளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

உடலை வாங்க மறுப்பு

உடனடியாக சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், உறவினர்களும், நண்பர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையும் படிங்க
  1. கோமியத்தை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
  2. மங்களூரு வங்கி கொள்ளை: நெல்லையைச் சேர்ந்த மூவர் கைது; ஒன்றரை கோடி மதிப்பிலான 2 கிலோ நகை, பணம் பறிமுதல்!
  3. திருப்பத்தூர் இளைஞர் தற்கொலை: இறப்பிற்கு முன் வீடியோ பதிவு; கந்துவட்டியால் நேர்ந்த சோகம்!

காளையன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உறவினர்கள், இந்த வழக்கை சந்தேக வழக்கில் இருந்து மாற்றி, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பிற சமூக அமைப்புகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன.

உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய உறவினர்கள் (ETV Bharat Tamil Nadu)

வழக்கறிஞர் வையவன் பேட்டி

இதுகுறித்து பேசிய தமிழர் தேசிய கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான வையவன், “காளையன் என்ற பட்டியலின சமூக இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது கொலையை காவல்துறை சந்தேக மரணம் என்ற அடிப்படையில் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இதனை உடனடியாக எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, காளையன் குடும்பத்திற்கு உரிய நீதியை பெற்று தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 22, 2025, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details