தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோமேட்டிக்கா அபிஷேகம்.. இந்துக்களின் வழிபாட்டிற்காக இஸ்லாமியரின் அசத்தல் கண்டுபிடிப்பு! - Invention Of Censor Devotional Kit

Invention Of Censor Devotional Kit: ஒரே ஒரு சூடம் ஏற்றினால் போதும், சென்சார் முறையில் ஒருபுறம் பக்திப் பாடல்கள் ஒலியுடன், சாமி சிலைக்கு அபிஷேகம் நடக்கும். இவ்வாறான இந்துக்களின் வழிபாட்டிற்காக அப்படியொரு அசத்தலான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார் இஸ்லாமியரான அப்துல் ரசாக்.

கண்டுபிடிப்பாளர் அப்துல் ரசாக்
கண்டுபிடிப்பாளர் அப்துல் ரசாக் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 5:39 PM IST

Updated : Jun 14, 2024, 6:33 PM IST

மதுரை:மதுரை சின்ன சொக்கிகுளம் அருகே வசித்து வரும் எலக்ட்ரீசியன் தான் இந்த அப்துல் ரசாக். 54 வயதாகும் இவர், இதுவரை 55க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பாட்டிற்குரிய பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடம் விருதும் பெற்றுள்ளார்.

அப்துல் ரசாக் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் உறுப்பினராக உள்ள இவர், எல்லா திசைகளிலும் சூழலும் டேபிள் ஃபேன், போர்வெல் குழிக்குள் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்றும் கருவி, பார்வையற்றோருக்கான ஒலி எழுப்பும் வாக்கிங் ஸ்டிக், தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஹைட்ராலிக் கழிப்பறை, ஆட்டோக்களுக்கான வைப்பர் போன்ற பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்.

இந்நிலையில், இந்துக்களின் வீடுகளில் உள்ள பூஜை அறையில் அவர்களுக்கு பிடித்த தெய்வங்களை சிலை வைத்து வழிபடும் வண்ணம், ஆச்சரியப்படும் வகையில் ஒரு கண்டுபிடிப்பை அண்மையில் நிகழ்த்தியுள்ளார். சிலையின் முன்பு உள்ள பீடத்தில் சூடம் ஏற்றினால் மட்டும் போதும், அக்குறிப்பிட்ட கடவுளைப் போற்றும் தெய்வ பக்தி பாடல்களோடு தண்ணீர், பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் சிலை மீது சென்சார் முறையில் ஆட்டோமேட்டிக்காக நிகழும்.

இது குறித்து அப்துல் ரசாக் கூறுகையில், “நெடு நாட்களாகவே இந்து சகோதரர்களுக்காக இந்த கண்டுபிடிப்பை செய்து தர வேண்டும் என்ற ஆவலும், வேட்கையும் இருந்தது. என்னுடைய பல இந்து சகோதரர்கள் வீடுகள் மிகச்சிறியதாக இருக்கும். வசதியானவர்களின் வீட்டில் பூஜை அறை தனியாக இருக்கும். வசதி வாய்ப்பற்ற ஏழை நடுத்தர இந்து மக்கள் வீட்டில் இது போன்ற வசதி இருக்காது.

அதனை மனதில் கொண்டே இந்த கண்டுபிடிப்பைச் செய்தேன். அவர்களுக்கு விருப்பப்பட்ட சிறிய சிலையை, தகரத்தால் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் எடை குறைவான பீடத்தில் அமைத்து, அதற்கு அருகிலேயே அபிஷேகத்திற்கு தேவையான தண்ணீர், பால் போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்துக் கொண்டால், அதில் சிறிய அளவிலான மோட்டார் ஒன்றின் வழியே சென்சார் மூலமாக சிலையின் மேற்புறம் உள்ள குழாயிலிருந்து வழியும் வகையில் அந்த அபிஷேகத்தை ஆட்டோமேட்டிக்காக அதுவே செய்யும்.

அதே போன்று, தண்ணீரும் பாலும் இயல்பாக வெளியேறுவதற்கான வழிமுறையும் இந்த பீடத்திலேயே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சூடம் ஏற்றிய சிறிது நேரத்திலேயே சென்சாரில் சூடு ஏற்பட்டு தெய்வ பக்தி பாடல்கள் துவங்கும். அத்துடன் சிலையின் மீது அபிஷேகமும் நடைபெறும். சூடம் எரிவது நின்றவுடன், மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளும் நிறைவு பெறும் வகையில் இதனை உருவாக்கியுள்ளேன்.

சாதாரண சிறிய ரக மோட்டார் என்பதால் இவை அனைத்திற்கும் மொத்தமாக வெறும் 700 ரூபாய்க்குள் தான் செலவு. பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை அபிஷேகத்திற்குப் பயன்படுத்த நினைத்தால், சற்று பெரிய மோட்டாரைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கான செலவும் 1,500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே செலவாகும். தங்களது பூஜை அறையில் அவரவர் வசதிக்கேற்றவாறு உருவாக்கிக் கொள்ளலாம்” என்கிறார்.

பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாத அப்துல் ரசாக்கின் திறமையை பாராட்டி, மதுரை சொக்கிகுளத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி 'கண்டுபிடிப்பாளர்களின் வழிகாட்டி' என்ற அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கி இவரை கௌரவித்துள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்களை தன்னைப் போலவே கண்டுபிடிப்புகளின் நாயகர்களாக உருவாக்கி வருவதை நம்மிடம் பெருமையோடு பகிர்ந்து கொண்டார். தனது இந்த புதிய கண்டுபிடிப்பு, தனக்கு பல்வேறு வகையிலும் உதவி வரும் இந்து சகோதரர்களுக்கு, தான் ஆற்றும் கைமாறு என்று நெகழ்ச்சியோடு கூறுகிறார்.

இதையும் படிங்க:மருத்துவ வசதிக்காக அதிநவீன ட்ரோன்.. தஞ்சை இளைஞர் அசத்தல்! - thanjavur Advanced drone

Last Updated : Jun 14, 2024, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details