மதுரை:மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரை இணைக்கும் வகையிலான வாட்ஸ் அப் குழுக்களை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தொடங்கி வைத்தார்.
இந்த வாட்ஸ் அப் குழுக்களில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள், குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், அரசு துறையில் பணிபுரிவோர், கிராம நிர்வாக அலுவலர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இடம் பெற்றிருப்பர் எனவும் இந்தக் குழுக்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள், சமூக விரோதிகள் நடமாட்டம், போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.