சென்னை:பாஜக கூறுவது போல் தொல்லியல், கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இக்கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலத்தில் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் வழங்கினார். இது குறித்து கடிதம் அனுப்பியும், நேரில் சந்தித்து விளக்கிய பின்னரும் மத்திய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது என எம்பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும் என சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.