மதுரை:மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் காட்சித் தொடர்பியல் துறை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து 'இலக்க முறையிலான ஊடக சூழல் விழிப்பறிவு மற்றும் நீடித்த வள அறிவியல் தகவல் தொடர்புக்கான கல்வியாளர்கள் உருவாக்கம்' என்ற தலைப்பிலான 5 நாள் தேசியப் பயிலரங்கம் நடந்தது. இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, தென் மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழும் வைகை ஆற்றின் பிறப்பிடமான தேனி மாவட்டம் வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை பகுதிக்கு, அம்மாணவர்கள் கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சூழலியல் செயற்பாட்டாளர்களின் அறிவுறுத்துதலோடு, நேரடியாக வைகை உற்பத்தியாகும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அதன் நிலை குறித்து அறிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அமைந்துள்ள வாலிப்பாறை மூல வைகையாற்றில் நிலவும் பல்வேறு தூய்மைக்கேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களைச் சந்தித்தும் உரையாடினர். பிறகு வைகையாற்றில் இறங்கி தாங்கள் கொண்டு வந்த விழிப்புணர்வுப் பதாகையுடன் இறங்கி, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலின் அவசியம் குறித்து முழக்கம் எழுப்பி, அதற்கான பணிகளில் தங்களின் பங்களிப்பையும் உறுதி செய்தனர்.
இது குறித்து 2-ஆம் ஆண்டு காட்சித் தொடர்பியல் பயிலும் மாணவி அனிதா கூறுகையில், “இந்தப் பயிலரங்கின் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வெறும் தொடர்பியல் படிப்பாக மட்டுமின்றி, சூழலியலைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது நாங்கள் வந்துள்ள இந்த வாலிப்பாறை பகுதியைப் பார்வையிடும்போதுதான் தெரிகிறது, இயற்கையைப் பேணி பாதுகாப்பது எவ்வளவு முக்கியத்துவமானது என்பது.இதற்கான பொறுப்பும், கடமையும் கூடுதலாக எங்களுக்கு இருக்கிறது என்பதையும் உணர முடிந்தது' என்றார்.