தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

MKU வருமானம் குறைந்ததற்கு என்ன காரணம்? மதுரை காமராஜர் பல்கலை ஓய்வூதியர்கள் கூறுவது என்ன? - MKU Pensioner Fasting Protest - MKU PENSIONER FASTING PROTEST

MKU Pensioner Fasting Protest: “மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு ஓய்வூதியம் குறித்து நினைவூட்டும் விதமாக இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்” என ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார்.

காமராஜர் பல்கலைகழக ஓய்வூதியர் சங்கம்
காமராஜர் பல்கலைகழக ஓய்வூதியர் சங்கம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 9:21 PM IST

மதுரை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியத்தை தடையின்றி தொடர்ந்து வழங்க நிரந்தரத் தீர்வு வேண்டும் என, மதுரை காமரஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் சீனிவாசன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது, கடந்த ஜூலை மாத ஓய்வூதியம் வழங்கப்பட நிலையில், அதற்கு அடுத்த இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, தமிழக அரசு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு முழக்கம் எழுப்பினர். இது குறித்து பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் சீனிவாசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம், ஓய்வூதியத்திற்காக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்திலுள்ள 13 கலை படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களில் மதுரை காமராசர் பல்கலைகழகம் மட்டுமே தனது பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஊதியம் மட்டுமன்றி, ஓய்வூதியத்தையும் வழங்க முடியாத பல்கலைக்கழகமாக உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்திலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், மருத்துவ பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் என்று தனித்தனியாக பிரிந்து சென்றுவிட்டன. அதேபோன்று, மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, அன்னை தெரசா எனவும் பிரிந்ததால், இங்கு பயிலக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. எனவே, இந்த நிலைக்கு முதல் காரணம் இதுதான்.

அடுத்ததாக, இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய நிறைய கல்லூரிகள் தன்னாட்சி பெற்றவையாக மாறிவிட்டன. மேலும், தொலைதூரக் கல்வி இந்த பல்கலைகக்கழகத்தின் பொன் முட்டையிடும் வாத்தாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், தற்போது அஞ்சல் வழிக் கல்வி இரண்டு மாவட்டங்களுக்குள் மட்டுமே இயக்க முடியும் என்ற நிலை காரணமாக, அதன் மூலமாக வந்த வருமானமும் குறைந்துவிட்டது.

இந்த பல்கலைக்கழகத்தின் தணிக்கை ஆட்சேபனைகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அதற்கு நிதி மேலாண்மை வெகுவாகக் குறைந்ததே காரணம். இங்கு தொடர்ந்து நிலவிய நிதி மேலாண்மைக் குறைபாடே தற்போதைய வீழ்ச்சிக்குக் காரணம். கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கு பொறுப்புக்கு வந்த துணைவேந்தர்கள் அனைவருமே முறையாக பணி நியமனம் பெறவில்லை. அவ்வாறு வந்தவர்கள் அனைவருமே தங்களைப் பற்றி சிந்தித்தார்களே ஒழிய, பல்கலைக்கழகத்தைக் கவனிக்கவில்லை.

ஓய்வூதியர்களாகிய எங்களுக்கு, அந்தந்த மாதத்தின் நிறைவில் ஓய்வூதியத்தை வழங்குவதற்கான நிரந்தரத் தீர்வுதான் வேண்டும். தற்போது 1,202 பேர் ஓய்வூதியதார்கள் உள்ளனர். அவர்களில் 450 பேர் குடும்ப ஓய்வூதியதாரர்கள். 90 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளனர்.

இதில் ஓய்வூதியத்தை எதிர்பார்த்துள்ள கடைநிலை ஊழியர்களும் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு நினைவூட்டும் விதமாக, எங்களது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பாக மேற்கொண்டு வருகிறோம். ஆனால், இரண்டு தரப்பிலிருந்தும் நிரந்தத்ர தீர்வுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எங்களின் ஓய்வூதியத்திற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்” என்றார்.

இது குறித்து பல்கலைக்கழக உயர் அலுவலர்கள் தரப்பில் கேட்டபோது, “பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பாக ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. உடடினயாக அவர்களுக்கு வழங்கக் கோரி அழுத்தம் கொடுத்துள்ளோம். நிரந்தரத் தீர்வுக்கு தமிழக அரசு வழி செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறையிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாவட்டக் கருவூலம் மூலமாக ஓய்வூதியம் வழங்குவதைப் போன்று, பல்கலைக்கழகங்களிலிருந்து ஓய்வு பெறுவோருக்கும் அரசுக் கருவூலங்கள் மூலமாக வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மொத்த பல்கலைக்கழகங்களில் உள்ள ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 கோடிக்கும் குறைவாகவே தமிழக அரசுக்கு செலவு செய்கிறது. ஆகையால், இது குறித்து நிரந்தரத் தீர்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நல வாரியம் உருவாக்க சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details