தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத நல்லிணக்கத்தில் பெருமைக்குரிய ஆன்மீக நிலமே மதுரை - ஆய்வாளர் சித்திரைவீதிக்காரன் பெருமிதம்! - chithirai veethikaran

Madurai Special: பல்வேறு சமயங்களின் நல்ல விசயங்களை உள்வாங்கி, காலங்காலமாக மத நல்லிணக்கத்தின் நிலமாகவே மதுரை திகழ்ந்து வருகிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்களை முன்வைத்து, மதுரையைப் பற்றி விவரிக்கிறார் ‘திருவிழாக்களின் தலைநகரம் மதுரை' என்ற நூலின் ஆசிரியர் சித்திரைவீதிக்காரன்.

மத நல்லிணக்கத்தில் பெருமைக்குரிய ஆன்மீக நிலமே மதுரை
மத நல்லிணக்கத்தில் பெருமைக்குரிய ஆன்மீக நிலமே மதுரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 8:02 PM IST

Updated : Feb 5, 2024, 9:02 PM IST

மத நல்லிணக்கத்தில் பெருமைக்குரிய ஆன்மீக நிலமே மதுரை

மதுரை:தொன்றுதொட்டு தமிழும், கலையும் தழைத்தோங்கிய நகரமாக இருக்கும் மதுரை, பல வரலாற்றுக் கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. கூடல் நகர், மல்லிகை நகர், தூங்கா நகர், ஏதென்ஸ் என அதனுடைய சிறப்பால் உலகமெங்கும் அறியப்படும் மதுரை, மத நல்லிணக்கத்திற்குச் சான்றாகவும் விளங்குகிறது.

மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு 'பசுமை நடை' என்ற பெயரில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அழைத்துச் செல்வதுடன், 'திருவிழாக்களின் தலைநகரம் மதுரை' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ள ஆய்வாளர் சித்திரைவீதிக்காரன், கடந்த பல நூற்றாண்டுகளாக மதுரை மண்ணில் நிலவி வரும் சமய, மத நல்லிணக்கப் பண்பை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக எடுத்துரைக்கிறார்.

அதில் அவர் கூறுவதாவது, “மதங்களைக் கடந்து திருவிழாக்களைக் கொண்டாடும் அந்த மரபுதான், மதுரையின் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு. இதை இயல்பாகவே மதுரை மக்கள் இந்த மரபைக் கடைபிடித்து வருகின்றனர். உதாரணத்திற்கு, மீனாட்சி அம்மன் பாவக்காய் மண்டபத்திலிருந்து வரும்போது, தெற்குவாசல் சின்னக்கடைத் தெருவிலுள்ள தர்கா சார்பாக பொதுமக்களுக்கு ரோஸ்மில்க் பானம் விநியோகம் செய்கிறார்கள். அங்கு எந்தவித பாகுபாடுமின்றி எல்லோரும் அருந்துகின்ற அந்தக் காட்சியை நாம் எப்போதும் காணலாம்.

அதேபோன்று, கள்ளழகர் திருவிழாவில் வண்டியூர் துலுக்கநாச்சியாரோடு தொடர்புபடுத்தி இன்றைக்கும் நாட்டார் கதையாக மக்கள் வழக்கில் உள்ளது. வண்டியூரிலும் சரி, வைகையாற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திலும் சரி, அழகர் திருவிழாவின்போது ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி, வீதியுலா வருகின்ற கள்ளழகரைக் கண்டு மகிழ்வதை இப்போதும் காணலாம். இது பல்லாண்டு தொடர்ச்சியாகவே உள்ளது.

தேவாலயத்தில் தேர் பவனி:கோ.புதூரிலுள்ள புனித லூர்தன்னை தேவாலயத்தின் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-ஆவது வாரத்தில் தேர் பவனி நடைபெறும். அச்சமயம், சமத்துவப் பொங்கல் விழா அந்த தேவாலயத்தின் வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பொங்கல் விழாவில் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். அந்த வழியாக கள்ளழகர் வருகின்றபோது, தேவாலயத்தின் சார்பாக இன்றைக்கும் நீர், மோர் பந்தல் அமைக்கின்ற மரபும் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள தர்காவில், சந்தனக்கூடு விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த விழாவைக்கூட இஸ்லாமிய பெரியவர்கள் மத நல்லிணக்க விழாவாகவே கொண்டாடுகின்றனர். திருப்பரங்குன்றம் வீதிகளில் சந்தனக்கூடு ஊர்வலம் வரும்போது, இந்துக்களும் தங்கள் வீட்டு வாசலுக்கு வருகின்ற சந்தனக்கூட்டை வணங்கி வழிபடுகின்றனர். அதேபோன்று, ஏதோ ஒரு காரணத்தால் பயந்து போன குழந்தைக்கு மந்திரித்து, மயிலிறகால் வருடி, புனித நீர் தெளிக்கின்ற மரபு மத பாகுபாடின்றி அனைத்து பள்ளிவாசல்களிலும் இப்போதும் நடைபெறுகிறது.

தர்காவில் இந்துக்கள்:அதிலும், குறிப்பாக மிகப் புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவின்போது, இந்துக்களுக்குதான் இப்போதும் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. சந்தனக்கூட்டினை மாட்டு வண்டியில் வைத்து அழைத்து வருபவர்கள் இந்துக்கள்தான். மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவின்போதும் சரி, கள்ளழகர் திருவிழாவிலும் சரி இந்துக்களுக்கு இணையாக இஸ்லாமியர்கள் நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு ஆனமிகப் பணி செய்வதை தங்களின் கடமையாக கொண்டுள்ளனர்.

இந்து பண்டிகைகளை கொண்டாடும் இஸ்லாமிய மக்கள்:மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், குறிப்பாக வல்லாளபட்டி, நாவினிப்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெறும் புரவி எடுப்புத் திருவிழாவின்போது, வெளியூர்களில் இருந்தாலும்கூட விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் திரும்பி கொண்டாடி மகிழ்கின்ற இஸ்லாமியக் குடும்பங்கள் அங்கே உள்ளன. தங்களின் பூர்வீக கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதை சகிப்புத்தன்மை என்பதைத் தாண்டி, நல்லிணக்கத்துடன் மேற்கொள்கின்றனர்.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், திருக்கண்ணபுரம் என்ற ஊரிலுள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயில் திருவுலாவின்போது அங்குள்ள தர்காவுக்குச் செல்வது இன்றைக்கும் வழக்கம். அந்தப் பெருமாளை இஸ்லாமியர்களும் வழிபாடு செய்கின்றனர் என்று தனது பல பேட்களில் குறிப்பிடுகிறார். இதுபோன்று இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமான ஆன்மீகத் தொடர்பு ஏராளமாக உள்ளது. பொதுவாக, நம் தமிழ்நாடு மத நல்லிணக்கம் என்பதை இயல்பான கூறாகவே கொண்டுள்ளது.

ஜிகர்தண்டாவை அறிமுகப்படுத்திய இஸ்லாமியர்கள்:வெளியிலிருந்து வந்த பிரியாணி, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பழக்கங்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். மதுரையின் அடையாளமாக திகழக்கூடிய ஜிகர்தண்டா கூட இஸ்லாமியர்கள் கொண்டு வந்த பானம்தான். அண்மையில் மறைந்த ஓவியர் பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ், சித்திரைத் திருவிழா குறித்துக் கூறும்போது, அந்நாட்களில் மதுரை ஒரு திருமண வீட்டிற்கு ஒப்பாகத் திகழும் என்பார். அதற்கு ஏற்றாற்போன்று, பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தோர் ஒன்றாகக் கொண்டாடி மகிழ்கின்ற பல்வேறு திருவிழாக்களைக் கொண்ட மண்தான் மதுரை.

மீனாட்சிக்கு பாதுகை கொடுத்த ஆங்கிலேய ஆட்சியர்:மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள விளக்கு ஒன்றை கொடையாக அளித்தவர், இஸ்மாயில் என்ற தாசில்தார். இன்றைக்கும் அவரது நினைவைப் போற்றும் தாசில்தார் பள்ளிவாசல் மதுரையில் உண்டு. அதேபோன்று, மதுரையின் ஆட்சியராகத் திகழ்ந்தவர் ரோஸ் பீட்டர். அவர் மீனாட்சியின் மீது கொண்ட பக்தியின் காரணமாக தங்கத்தாலான பாதுகை ஒன்றை செய்து கொடுத்துள்ளார்.

மீனாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வரும்போது, இந்த பாதுகையை அணிந்து வருவதை இப்போதும் காணலாம். இதுபோன்ற மாற்று மதங்களைச் சார்ந்தோர், பலர் மதுரை கோயில்களுக்கு பல்வேறு கொடைகளை அளித்துள்ளனர். அதேபோன்று கோயில்களைச் சார்ந்தோரும் தர்காக்களுக்கு நிலம் உள்ளிட்ட பல கொடைகளை அளித்துள்ளனர். இது போன்ற நல்ல இணக்கமான இந்த பண்பாடு என்றென்றும் தொடர வேண்டும் என்பதுதான் மதுரை மக்களின் விருப்பமும், வேண்டுகோளும்” என்றார்.

இதையும் படிங்க:இயக்கத்தில் இமயம் தொடும் பழங்குடியின பள்ளி மாணவர்கள்! அண்ணா பல்கலைக்கழக குறும்பட விழாவிற்கு தேர்வான மாணவர்களின் படைப்பு!

Last Updated : Feb 5, 2024, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details