மதுரை:2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், தொழில், பண்பாடு, தொல்லியல் என உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மதுரைக்காக 20 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த பலரும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் உள்ள தொழில்துறையினர் இந்த பட்ஜெட்டை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள ஈடிவி பாரத் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது பலரும் தங்களுடைய கருத்துகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள்.
இது குறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "இதனை வழக்கமான பட்ஜெட் என்பதைவிடப் பொதுமக்கள் சார்ந்த பரவலான நலத்திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட் என்றே கூறலாம். இருப்பினும் மின்சார கட்டணத்தின் உயர்வால் பாதிக்கப்படும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான நிலை கட்டணக் குறைப்புச் செய்திருக்க வேண்டும்.
நலிவடைந்த தொழில்களுக்கான எம்எஸ்எம்இ நலவாரியம் குறித்து அறிவிப்பு இல்லை. திவாலான தொழிற்சாலைகள் புத்துயிர் பெற மற்றும் தொழிலிருந்து வெளியேறப் போன்றவற்றுக்கான காப்பீட்டுத் திட்ட வசதிகள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
குறைந்த வட்டி விகிதங்களில் தொழில் கடன் வழங்குவதற்கான அறிவிப்பும் இல்லை. மேலூரில் சிப்காட் தொழிற்பேட்டைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பெரு நிறுவனங்கள் மதுரை மாவட்டத்திற்கு வருவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்றார்.
இதனையடுத்து வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேல் கூறுகையில், "தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களோடு ஒப்பிட்டால் தென் மாவட்டங்களில் தொழில், பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. தென் தமிழகத்தின் வலிமை சுற்றுலாத்துறை, வழிபாடு, பொழுதுபோக்கு, கடற்கரை, கலாச்சாரம், தொல்பொருள், மருத்துவம், இயற்கைச் சுற்றுச்சூழல், பாரம்பரியம், பொருட்காட்சி எனப் பல சுற்றுலாக்களுக்குத் தென் தமிழகத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன.