மதுரை:மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.பி.குளம் கண்மாயை ஒட்டிய பகுதியான முல்லைநகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 3000 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவு:இதில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பிலும் மாநகராட்சி சார்பிலும் ஏராளமான வீடுகள் வழங்கப்பட்டு அதிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.பி.குளம் கண்மாயில் அதிகளவு ஆக்கிரமிப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உரிய பரிசீலனை செய்ய உத்தரவு:இந்த உத்தரவுகளை மறு சீராய்வு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், “நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்ட முடியாது எனக் கூறி இங்கு குடியிருப்பவர்களை மறு, குடி அமர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கை மனுவை பெற்று அதன் அடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பரிசீலனை செய்யாமல் காலி செய்ய சொல்லவதாக மனு:இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், இந்த பகுதி மக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமல் பொதுப்பணித்துறை வீடுகளை காலி செய்ய வேண்டும் என அனைத்து வீடுகளுக்கு முன் நோட்டீஸ் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதே பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும், குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
நோட்டீஸிற்கு தடை விதிக்க மனு:இந்த நோட்டீஸிற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உள்ள நீர்நிலை வழக்குகளை விசாரிக்க கூடிய நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு முன் நேற்று (நவ.11) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் நீதிபதிகள் முன்பு பி.பி.குளம் கண்மாய் குறித்த வரைபடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பி.பி.குளம் கண்மாய் 23 ஏக்கர் பரப்பளவில் இருந்துள்ளது. தற்போது, ஆக்கிரமிப்புகளால் மூன்று ஏக்கர் கண்மாய் மட்டுமே உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் பகுதியில் 1500 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் மாற்று இடம், அரசு மானிய விலையில் வழங்க தயாராக உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டது.