மதுரை:மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில் பழமையான நரசிங்கம் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கல்குவாரி அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பல ஆண்டுகளாகச் செயல்படாத பல கல்குவாரிகள் உள்ளன.
இந்த கல்குவாரிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. கடந்த ஆண்டில் இங்கு 2 பெண்கள் விழுந்து பலியாகியுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி, யானைமலை அடிவாரத்தில் செயல்படாமல் உள்ள குவாரியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, போலீசார் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.