மதுரை:தை திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தவுடன் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளபதி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் பேட்டி (ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த பின் மதுரை ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் நடந்து முடிந்திருக்கிறது. ஆயிரம் காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்டன.
கடந்த ஆண்டு சில காளைகள் வாடிவாசலுக்கு வராமலே படுத்துவிட்டன. ஆனால் இந்த முறை காளைகள் உற்சாகமாக களம் கண்டன. ஆனாலும் நேரம் குறைவாக இருந்ததால் 8 சுற்றுகள் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியாக வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் வகையில் இறுதிச்சுற்று போட்டி நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை யார் வேண்டுமானாலும் தனி நபராகவோ, அமைப்புக்குழுக்களாகவோ நிகழ்ச்சிகளை நடத்தலாம். அதற்கான அரசாணை வெளிவர உள்ளது. இனிமேல் அங்கு அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். நேற்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 52 பேர் காயம் அடைந்தனர். 15 பேருக்கு பெரிய காயம், மற்றவர்கள் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று ஆட்சியர் சங்கீதா கூறினார்.
இதையும் படிங்க:காணும் பொங்கல் கொண்டாட்டம்.. பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய மலைவாழ் மக்கள்!
தொடர்ந்து பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் இனி வருங்காலங்களில் ஒன்றிணைந்து கலைஞர் ஏறுதழுவல் அரங்கத்தில் நிகழ வாய்ப்புள்ளதா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "இந்த ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்படுகின்றன. இது அவரவர் ஊருக்கென இருக்கும் பாரம்பரியம். அதை நாம் மாற்ற முடியாது. அது மக்களுடைய சென்டிமென்ட்டாக உள்ளது. ஆகையால் அந்தந்த ஊர்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்துவது வழக்கம். கலைஞர் ஏறுதழுவல் அரங்கத்தில் அதிகளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் அளவிற்கு இடமுள்ளது” என்று ஆட்சியர் பதிலளித்தார்.
ஜல்லிக்கட்டில் உள்ளூர் மாடுகள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “ஏற்கெனவே அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்களுக்கு டோக்கன் எண் 700, 800 என்று வந்ததால் காளையை அவிழ்க்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்" என்றார்.
தொடர்ந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவக்க நிகழ்ச்சியின்போது இருக்கை சம்பந்தமாக அவமதிக்கப்பட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மதுரை ஆட்சியர் சங்கீதா, "சில புகைப்படங்களை வைத்து தவறுதலான கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோல் ஒன்றும் நடக்கவில்லை. மாவட்ட ஆட்சியராக அமைச்சரக்கு தர வேண்டிய மரியாதையை கொடுத்தேன்” என்றார்.
முன்னதாக, "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்தார்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
முதியவர் உயிரிழப்பு: இதனிடையே, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் கூடும் பகுதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி (66) என்ற முதியவரை மாடு கழுத்தில் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். மேல்சிகிச்சைக்காக அவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.