மதுரை:தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 44 ஆயிரத்து 321 சிறுமிகளுக்கு குழந்தை பிறப்பு நிகழ்ந்துள்ளதாகவும், இவர்களுக்கான பிரசவத்தின்போது 108 சிறுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு அதிர்ச்சி தகவலை ஆர்டிஐ வெளியிட்டுள்ளது. தற்போது இதுகுறித்து குழந்தைகள் மனநல வல்லுநர் முனைவர் ராணி சக்கரவர்த்தி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது,
அபாயமான அறிகுறி:"18 வயதுக்கு குறைவான பெண்களின் பிரசவம் குறித்து அண்மையில் வெளியான ஆர்டிஐ தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் மட்டும் 18 வயதுக்கு குறைவான ஏறக்குறைய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இது மிக அபாயகரமான அறிகுறி. கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்தபோதிலும்கூட, இதுபோன்ற தகவல்கள் நமக்கு எச்சரிக்கை மணியே.
குழந்தை பிறப்பிற்கு முன்பே இதுபோன்ற சிறுமிகளுக்கு கருக்கலைப்பு நிகழ்ந்திருக்கலாம். அவையெல்லாவற்றையும் கணக்கெடுத்தால் மிக அதிர்ச்சியாக இருக்கக்கூடும். அதுமட்டுமன்றி, வீட்டிலும் சட்டப்பூர்வமற்ற வகையிலும் பிரசவம் செய்தவர்கள் இந்த கணக்கில் வரவில்லை.
பாலியல் வன்கொடுமை:காதல் திருமணம், சாதி, பெண் குழந்தைகள் குறித்த சமூக அச்சம், பாதுகாப்பு, உறவு விட்டுப்போய்விடக்கூடாது, அவசரம் கருதி திருமணம் என 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான காரணிகள் நம் சமூகத்தில் உள்ளன. இவையன்றி, வெளியே சொல்லப்படாத பாலியல் வன்கொடுமை முக்கிய காரணமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும்கூட இதுபோன்ற அவலங்களில் அடங்கும்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகள் கவனத்திற்கு.. "ஒரு வாரம் முன்பே மருத்துவமனையில் சேருங்கள்" - பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
விளைவுகள் தெரியவில்லை:நமது அரசுகள் பெண் குழந்தைகளுக்கு என்று நிறைய திட்டங்கள் தீட்டியிருந்தாலும், மாற்றம் ஏன் நிகழவில்லை? நாளுக்கு நாள் இதுபோன்ற கொடுமைகள் அதிகரிக்க என்ன காரணம்? என்று பார்த்தால், நம் சமூகத்தில் பெண் குழந்தைகள் குறித்த போதுமான விழிப்புணர்வு பெண்கள், பெற்றோர்களிடம் சென்றடையவில்லை. இதற்கான விளைவுகள் அவர்களுக்குத் தெரியவில்லை.
மன அழுத்தம்:குழந்தையைத் தாங்கும் அளவு 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் கர்ப்பப்பை முழு வளர்ச்சியடைந்திருக்காது. பேறுகால வலியைத் தாங்குகின்ற அளவிற்கு அவளது உடலில் வலு இருக்காது. இதன் காரணமாக ரத்தசோகை, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், அதிக உதிரப்போக்கு, சிக்கலான பிரசவங்கள், இதன் காரணமாக பிறக்கும் குழந்தையோ அல்லது தாயோ இறந்துபோதல், பிரசவத்திற்குப் பிறகான சிக்கல்கள் என உடல்ரீதியாக பல்வேறு எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இத்துடன், புற்றுநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கும் ஆளாகலாம். பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் அவர்களைப் பாழுங்குழிக்குள் தள்ளுதல் என்பது இதுதான். இதனை அனைத்துப் பெற்றோர்களும் உணர வேண்டும். அதுமட்டுமன்றி இளம் வயதுத் திருமணம் பெண்களுக்குள் வேறு மனச்சிக்கலை உருவாக்கக்கூடும். கல்லூரி செல்லும் வயதில் திருமணமானால், சக தோழிகளை ஒப்பிட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
ஆட்டிஸம் குழந்தைகள்:பெண்கள் முன்னேறியிருந்தால் அந்த சமூகம்தான் முன்னேறிய சமூகம் என்று பொதுவாக நாம் சொல்கிறோம். அவர்களால்தான் அறிவுசார் சமூகத்தை உருவாக்க முடியும். ஒரு பெண் பாதிக்கப்படும்போது, அவளது எதிர்காலத் தலைமுறையே பாதிப்பிற்கு ஆளாகிறது. தனக்குப் பிறக்கும் குழந்தையை வளர்ப்பதே 18 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு சுமையாகத் தெரியும்.
ஆகையால் இந்த இடத்தில் குழந்தையும் ஆரோக்கியமாக வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் போகக்கூடும். போதுமான வளர்ச்சியின்றியும், சத்துக்குறைபாடோடும் இவர்களுக்கான குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. ஆட்டிஸம், ஹைப்பர் ஆக்டிவ் போன்ற குழந்தைகளெல்லாம் உருவாவதற்கு இளம்வயது திருமணங்கள் முக்கிய காரணமாக அமைகிறது.
கல்வியில் கவனம்:18 வயதுக்கு முன்னால் திருமணம் செய்வது சட்டப்படி மட்டுமல்ல தார்மீக அடிப்படையிலும் குற்றம். இதுபோன்ற இளம்வயதுத் திருமணங்கள் வாயிலாக, அப்பெண்ணின் கனவுகளை, சந்தோசங்களைத் தொலைப்பதற்கு பெற்றோர் ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது. மேலும் இதுபோன்ற விசயங்களில் ஆணுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அனைத்தும் பெண்களுக்கே.
இந்த சூழலில் கருக்கலைப்பு போன்ற விசயங்கள்கூட பெண்ணின் எதிர்கால வாழ்வுக்கு உலை வைப்பதாக அமைந்துவிடக்கூடும். கல்வி, விளையாட்டு, கலை, பணி போன்றவற்றில் மட்டுமே பெண்ளுக்கு ஆர்வம் ஊட்டி வளர்க்க வேண்டும். இந்த ஒரு நிலை வந்தாலே நல்ல மாற்றம் ஏற்படும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்