மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (35) என்பவர், மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று (பிப்.15) காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து, வண்டியூர் டோல்கேட் அருகே சங்கு நகர் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான குடோனுக்கு. தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத 3க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சக்திவேலை விரட்டியுள்ளனர். சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில், மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களால் வெட்டி உள்ளனர்.
சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையிலும், விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர், சக்திவேலின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.