மதுரை: திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியைச் சேர்ந்த கணேசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியை அடுத்து உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் எனது மூன்று குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சேர்த்தது முதல் தற்போது வரை பள்ளிக் கட்டணம், நன்கொடை உள்ளிட்ட இதர எந்த கட்டணமும் தாமதம் இன்றி முறையாக நான் செலுத்தி வந்துள்ளேன்.
குழந்தைகளின் இந்த வருட கல்விக் கட்டணமான 15 ஆயிரம் ரூபாயைச் செலுத்த பள்ளி நிர்வாகத்தில் இருந்து எனது செல்போனிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 24.1.2024 அன்று பள்ளியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எனது 3 குழந்தைகளையும், தேர்வு எழுத விடாமல் அவர்களது விடைத்தாள்களை பறித்து, மற்ற மாணவர்கள் முன்னிலையில் மன ரீதியாக அவமானப்படுத்தி, பள்ளி வளாகத்தில் காலை முதல் மாலை வரை மூன்று குழந்தைகளையும் நிற்க வைத்து, பள்ளி முதல்வரும், வகுப்பு ஆசிரியையும் கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.
இதனால் எனது மூன்று குழந்தைகளும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதைகளைச் சந்தித்துள்ளனர். எனது குழந்தைகளிடம் காரணம் குறித்து கேட்டபோது நடந்த சம்பவத்தை விளக்கினர். இதனால் 9ஆம் வகுப்பு படிக்கும் எனது மூத்த மகன், மன உளைச்சலால் தற்கொலை செய்ய முயற்சித்த பின் காப்பாற்றப்பட்டார்.