மதுரை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரேஸ்வரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "என்னுடைய மூத்த மகனான முத்துமணிகண்டன், கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் அரசின் உரிய அனுமதியுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையைக் கொண்டு சென்ற எங்கள் உறவினரான துளுக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜகுரு என்பவரின் வாகனத்தில், ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காகச் சென்றிருந்தான்.
அப்போது ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது, வாகனத்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டு காளை எனது மகனின் ஆணுறுப்பில் குத்தியதில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காளை முட்டி உயிரிழந்த எனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் அரசின் அனுமதி பெற்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுத் தாக்கல் செய்திருந்தார்.