மதுரை: மதுரையை சேர்ந்த கருப்பச்சாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ஏறு தழுவுதல் அரங்கத்தை, கடந்த ஜனவரி 24ஆம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்தின் மைதானத்தின் பின்பகுதியில், தனக்குச் சொந்தமாக சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னந்தோப்பு நிலம் உள்ளது.
என் பட்டா நிலத்தில் தென்னை, மா, தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்கள் ஏராளமாக உள்ளன. போர்வெல் மற்றும் கிணறு மூலம் விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில், திறப்பு விழாவிற்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுகள் எனது இடத்தின் வழியே வெளியேறிக் கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் என்னிடம் வருவாய்த்துறை அதிகாரியிடம் அனுமதி கேட்ட நிலையில், தமிழக அரசு விழா என்பதாலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகளே நேரில் வந்து கேட்டுக் கொண்டதாலும் நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
அதன்பின், என் இடத்தை ஒட்டி அமைந்திருந்த ஜல்லிக்கட்டு அரங்கின் காம்பவுண்ட் சுவரினை இடித்து, என் தோப்பு அமைந்திருக்கும் இடத்தின் வழியே மாடுகள் வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தோப்பிலுள்ள மரங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள குழாய் பைப்புகள் மற்றும் வளர்ந்து வரும் நிலையில் உள்ள சில மரங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து. காம்பவுண்ட் சுவரினை மீண்டும் கட்டுவதற்கு அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்காமல், எனது தோப்பு வழியாக நிரந்தரமாக மாடுகள் வெளியேற வருவாய்த்துறை அதிகாரிகள் கிரில் கேட் அமைக்கின்றனர். எனது சொந்த பட்டா நிலத்தில் அதிகாரிகள் அத்துமீறி பாதை அமைத்து, போட்டி நடைபெறும் நாட்களில் எல்லாம் எனது தோப்பினை நிரந்தரமாக பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.