மதுரை: கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வின் அடிப்படையில் இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சுதா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடந்தது.
130 மையங்களில் நடந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதினர். தேர்வுக்கான வினா குறிப்புகள் பிப்ரவரி 19ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான நியமனத் தேர்வில் இறுதி விடை பட்டியில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 13 வினாக்களுக்கு என்ன பதிலை தேர்வு செய்திருந்தாலும் மதிப்பெண் என உள்ளது. மேலும், 11 வினாக்களுக்கு ஏதாவது 3 பதில்களை தேர்வு செய்தால் மதிப்பெண் என மொத்தம் 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.
எனவே, இறுதி விடைத்தாள் அடிப்படையில், தற்போது வெளியிடப்பட்ட பணி நியமன பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும். வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இதே போல் ஜெயந்தி என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வின் அடிப்படையில் இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 8 தமிழக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று அசத்தல்! - NEET Exam Results 2024