மதுரை: மதுரையைச் சேர்ந்த ராஜசபை என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஆவின் நிறுவனத்தில் பாலில் இருந்து வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், ஸ்வீட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது.
மதுரை ஆவின் நிறுவனத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஆவின் நிறுவனத்தில் பகல் நேரங்களில் எல்.பி.ஜி கேஸ் மூலம் கொதிகலன்கள் பயன்படுத்தப்பட்டாலும், இரவு நேரங்களில் பர்னஸ் ஆயில் மூலம் கொதிகலன்கள் இயக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, ஆவின் நிறுவனத்தில் உள்ள புகைக் குழாய்கள் மூலம் அதிகளவில் நச்சு கரும்புகைகள் வெளியேறி வருகின்றது. இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்புறங்களில் துவைத்து காயப்போடும் துணிகளில் அதிக அளவில் கார்பன் படர்ந்து காணப்படுகின்றது.
மேலும், ஆவின் நிறுவனத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கரோனா காலகட்டங்களில் இதன் காரணமாக அதிகமானோர் உயிரிழக்கக் காரணமாகவும் இருந்தது. இதனைத் தடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அளித்ததன் காரணமாக, கடந்த 4.1.2023 அன்று மூன்று மாதங்களில் பர்னஸ் ஆயில் மூலம் கொதிகலன்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு, எல்.பி.ஜி கேஸ் மூலம் கொதிகலன்கள் பயன்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, எல்பிஜி கேஸ் மூலம் கொதிகலன்களைப் பயன்படுத்த நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:ஜாபர் சாதிக் விவகாரம்; ஹவாலா தரகரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன்! - Jaffer Sadiq Drug Case Update