தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீப்பாலக்கோட்டை அரசுப் பள்ளியில் மீண்டும் ஆங்கில வழிக்கல்வி; மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்க உத்தரவு! - petition to resume English medium - PETITION TO RESUME ENGLISH MEDIUM

HC Madurai bench order to take action: சீப்பாலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் ஆங்கில வழிக்கல்வியை தொடர உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை புகைப்படம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 5:14 PM IST

மதுரை:தேனி சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சீப்பாலக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி 1951-ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களில் 85 சதவீதம் பேர் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 15 சதவீத மாணவ, மாணவியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்.

இப்பள்ளியில் கடந்த 2014-2015ஆம் ஆண்டு வரை ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்க கல்வித்துறையால் உத்தரவிடப்பட்டு தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில், மாணவர் நலனுக்கு எதிராக ஆசிரியரும், பள்ளி நிர்வாகக்குழு பிற ஆசிரியர்களும் சேர்ந்து தீர்மானம் போட்டு அனுப்பி, ஆங்கில வழிக் கல்வியை தற்போது எடுத்து விட்டார்கள்.

இந்த ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். ஆங்கில வழிக்கல்வி வேண்டாம் என தன்னிச்சையாக முதன்மைக் கல்வி அலுவார்களுக்கு தலைமை ஆசிரியர் 2023 மே 23ஆம் தேதி நாளிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியரின் இந்த தன்னிச்சையான முடிவு இலவச கட்டாய கல்விச் சட்டம் 2009-க்கு முரணானதாகும். எனவே, தலைமை ஆசிரியரின் 2023 மே 23ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலம், இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடரவில்லை என்ற முடிவை ரத்து செய்து, இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பட்டியல் இன, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு 6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி தொடர உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: உலக பட்டினி தினம்; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற அன்னதானம்! - TVK Gave Free Food

ABOUT THE AUTHOR

...view details