மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.
அதில் விளக்கு பூஜை, முளைப்பாரி, பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவர். முளைப்பாரியை பெண்கள் ஏந்தி பொது பாதை வழியாகச் சென்று கண்மாயில் கரைக்கப்படும். கடந்த வருடம் கோயில் திருவிழாவின் போது நடைபெற்ற முளைப்பாரி நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் பொதுமக்கள் செல்லக்கூடிய பொது பாதையை வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மறைத்து பிரச்னைகளில் ஈடுபட்டனர்.
அரசு அதிகாரிகள் மூலம் சமாதானம் பேசி, பிறகு முளைப்பாரியை கரைக்க பொது பாதையில் வழிவிடப்பட்டது. இதே போன்று ஆத்திப்பட்டி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை கலாச்சாரம் இன்று வரை நடைபெறுகிறது. மேலும், கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டபத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
எனவே, ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெறும் முளைப்பாரி நிகழ்ச்சியை பொது வழியில் சென்று கரைக்கவும், இரட்டைக் குவளை கலாச்சாரம் மற்றும் ஆத்திபட்டி கிராம திருமண மண்டபத்தில் அனைத்து சமூக மக்கள் சுப நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அப்போது நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் சாலை மற்றும் பொது பாதையில் சாதி ரீதியாக எந்த ஒரு கோஷமும் எழுப்பக் கூடாது, வெடி வெடிக்கக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயில் திருவிழா மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மீறி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைதனர்.
இதையும் படிங்க:தனியார் திருமண மண்டபம் மீதான விதிமீறல் வழக்கு: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!