தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் ஐகோர்ட் அமர்வு உத்தரவு! - Palani Panchamirtham issue - PALANI PANCHAMIRTHAM ISSUE

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப்படம்
இயக்குநர் மோகன் ஜி மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 9:59 AM IST

மதுரை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான மோகன் ஜி, பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது பழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான் ஒரு முருக பக்தர் எனவும், பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து எந்த விதமான அவதூறுகளையும் நான் பரப்பவில்லை, செவிவழிச் செய்தியாக நான் கேள்விப்பட்டதை பேசியதாகவும், தன் மீது வேண்டுமென்றே பொய்யான புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பழனி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜராகி வாதிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், மனுதாரர் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநராக உள்ளதாகவும், சமூகத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்றே பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை, உண்மைத்தன்மை உறுதி செய்யாமல் சமூக வலைத்தளம் மூலமாக கருத்து தெரிவித்துள்ளார் என்றார்.

இதையும் படிங்க: பழனி கோயில் ராஜகோபுரம் சேதம்!

மேலும், இவர் மீது சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இவரைக் கைது செய்து, நீதிமன்றம் உத்தரவின் பேரில் பிணையில் வெளியே வந்துள்ளதாகவும், தொடர்ந்து இது போன்று அவதூறு கருத்துக்களைப் பதிவிடும் இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக்கூடாது. உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால், பழனி கோயிலுக்குச் சென்று அங்கு தூய்மைப் பணி மேற்கொள்ளலாம் அல்லது பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் சென்று கூட 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம் எனக் கருத்து தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கூற வேண்டும். பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒவ்வொன்றில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரருக்கு மேலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details