தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு செய்யும் நிலை வரும்” - திருவிழா விவகாரத்தில் நீதிமன்றம் கருத்து! - Sundarakshi Amman temple Issue - SUNDARAKSHI AMMAN TEMPLE ISSUE

Nanguneri Sundarakshi Amman temple Issue: நாங்குநேரி சுந்தராட்சி அம்மன் கோயில் திருவிழா விவகாரத்தில், மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே சுமூகமாக கோயில் திருவிழாக்களை நடத்த முடியும் என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மக்களுடன் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 3:32 PM IST

மதுரை:திருநெல்வேலி மாவட்டம், பருத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாங்குநேரி அடுத்த பருத்திப்பட்டு கிராமத்தில் உள்ள சுந்தராட்சி அம்மன் கோயில் திருவிழா வருகிற 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோயில் திருவிழாவின் போது பால்குடம், கும்பம், சாமியின் சப்பரம் எங்கள் ஊரில் உள்ள உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது.

பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருக்களில் எடுத்துச் செல்வதில்லை. எனவே, கோயில் திருவிழாவின் போது உயர் சாதியினர், பட்டியல் சமூகத்தினரை சாதிய பாகுபாடுகளுடன் நடத்துவதாகவும், கோயில் திருவிழாக்களில் அனைத்து சாதியினருக்கும் சம வழிபாட்டு உரிமை வழங்க உத்தரவிட வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாதிய பாகுபாடு உள்ளதாக வரப்பட்ட புகாரின் அடிப்படையில் சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து தரப்பினரையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தவித சாதிய பாகுபாடு இல்லாமல் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே சுமூகமாக கோயில் திருவிழாவை நடத்த முடியும். அதை விடுத்து அதிகாரிகள் தலையிட்டு எவ்வாறு திருவிழாவை நடத்த முடியும். இதனையும் மீறி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் தடியடி, துப்பாக்கிச் சூடு செய்யும் நிலைமை ஏற்படும். எனவே, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தை குறித்த முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் முடிவில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் திட்டவட்டம்! - Thiruvanmiyur Pamban Swami Temple

ABOUT THE AUTHOR

...view details