மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலங்களில் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியாக யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதன் பின்னர், கரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் முகாம் நடத்தப்படவில்லை. ஆனால், கரோனா காலம் முடிந்த பின்னரும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இதுவரை நடத்தப்படவில்லை.
முகாம்களில் போதுமான ஓய்வு, பழங்கள், காய்கறிகள், கரும்பு, சிறுதானியங்கள், வெல்லம் போன்ற இயற்கையான சத்துப் பொருட்கள் வழங்கப்படுவதோடு, கால்நடை மருத்துவர்களின் முறையான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த முகாம்கள் முடிந்த பின்னர் யானைகள் புத்துணர்வுடன் காணப்படுகின்றன. ஆகவே, தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமை ஆண்டுதோறும் நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.