மதுரை:கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு வழிபாடு நடத்த இயந்திரம் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி அளித்த மனுவை விசாரித்த மதுரை கிளை, அடுத்த ஆண்டிற்கு மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு பைபர் படகில் செல்ல அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த பிரின்சோ ரைமண்ட் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1913ஆம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டு மீனவர்கள் அங்கு வழிபாடு நடத்துவார்கள். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தற்போது வருகின்ற பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் மேற்படி கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுபடகில் மீனவர்கள், பொதுமக்கள் சென்று வந்தனர். ஆனால் 2013ஆம் ஆண்டில் நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு செல்வதற்கு பாதுகாப்பு இல்லையென்று தடை செய்யப்பட்டது.
அதன்பிறகு விசைப்படகிற்கு ஒரு நபருக்கு ரூ.1300 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றதில் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகினை அனுமதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்களுக்கும், மீனவ குடும்பங்களுக்கு மட்டும் கச்சத்தீவு, அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.
இருப்பினும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏதுவாக நவீன முறையில் இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகில் இருந்து இயந்திரம் பொருத்திய பைபர் படகு முறைக்கு அனைத்து மீனவர்களும் மாறிவிட்டனர். கச்சத்தீவு திருவிழாவிற்கு விசைப்படகில் செல்ல ஒரு நபருக்கு 2ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது.