மதுரை: மதுரையைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. முன்னதாக, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், போதைப் பொருளை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை நீதிபதிகளும் பாராட்டியதோடு. வழக்கில் உத்தரவை பிறப்பிப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், “போதைப் பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
இருப்பினும், காவல்துறையினர் கூடுதல் விழிப்புடன் உரிய நடவடிக்கை எடுத்தால் போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, தமிழ்நாடு தலைமைச் செயலர், மாநில உள்துறைச் செயலர், காவல்துறை தலைவர் ஆகியோர் நேர்மையான அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட ரகசியக் குழுவை அமைத்து, போதைப்பொருள் குற்றவாளிகளுடன் கைகோர்த்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளைக் கண்காணிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:“போதைப்பொருள் நுழைவைத் தடுக்க போலீசாருக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும்” - உயர் நீதிமன்றக்கிளை கருத்து! - Special Unit Form Trafficking Ganja