மதுரை: கன்னியாகுமரி பாஜக நிர்வாகி சுஜின்ராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “78வது சுதந்திர தின விழா விமரிசையாக நாளை கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, பாஜக சார்பில் இந்தியா முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வந்தே மாதரம் கோஷத்துடன், ரகுபதி ராகவ ராஜாராம் பாடலுடனும், பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறின்றி தேசியக்கொடி ஏந்தி வாகனப் பேரணி நடத்த முடிவு செய்தோம்.
இதில் பங்கேற்பவர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பங்கேற்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி, மாவட்டத்தின் கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய 6 தொகுதிகளிலும் கடந்த ஆகஸ்ட் 12 அன்று நூறுக்கும் குறைவான மோட்டார் சைக்கிள்களில் வாகனப் பேரணி நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்து இருந்தோம்.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, சுதந்திர தினத்தன்று (அதாவது நாளை) 6 தொகுதிகளிலும் தேசியக்கொடி ஏந்தி வாகனப் பேரணி நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.