மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு சட்ட விரோதமாக கனிமங்களை கடத்தியதாக எனது டிராக்டர் மற்றும் டிப்பர் லாரி ஆகியவை, தூத்துக்குடி மாவட்டம் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பறிமுதல் செய்தார்.
பின்னர், எனது வாகனங்கள் கோவில்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, லாரி தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனது லாரி மற்றும் டிராக்டர் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க மனு அளித்தேன். அப்போது எனது வாகனம்
2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எனவே, எனது வாகனங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க” கோரி கடந்த 2014ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கர், “2013 பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினார் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, அரசாங்க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் காணாமல் போனதாக கூறுவது மாவட்ட நிர்வாகத்திற்கு மிகப்பெரிய வெட்கக்கேடாகும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் காணாமல் போனது கூட தெரியமால், அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றார்கள்.