ஆரப்பாளையம் தண்ணீர்த் தொட்டியில் நீர் வெளியேறும் காட்சி (credits - ETV Bharat Tamil Nadu) மதுரை:மதுரை மாநகராட்சி மண்டலம் 3-இன் சார்பாக, ஆரப்பாளையம் குடிநீரேற்று நிலையம் அருகே தற்போது பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், திடீரென அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்து அருவி போல் சாலையில் ஊற்றியது. இந்நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தண்ணீரில் தங்களது வாகனங்களை கழுவியதுடன், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் உற்சாகத்துடன் குளித்தனர். இதற்கிடையே, இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், இது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள், “மதுரை மாநகராட்சி மண்டலம் 3வது வார்டு எண் 57 ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில், முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தின் கீழ், புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய நீரின் அழுத்தம் குறித்தான பரிசோதனை மாநகராட்சியின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பாக கட்டப்படும் ஒவ்வொரு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு இதுபோன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளது.
புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உடைபட்டு தண்ணீர் வெளியேறுகிறது என்று மக்களிடையே வதந்தி பரவிய நிலையில், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: திமுகவுக்கு சிக்கலைக் கொடுக்கும் தொகுதிகள்! முடிவு என்ன வரும்? - Lok Sabha Election 2024